கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி.உரத்தை இருப்பு வைக்க விவசாயிகள் கோரிக்கை
மானாவாரி சாகுபடி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி. உரத்தை இருப்பு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மானாவாரி சாகுபடி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி. உரத்தை இருப்பு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 310 மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மானாவாரி விவசாயிகள் புரட்டாசி மாதம் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். விதைப்புக்கு முன் அடியஉரமாக டி.ஏ.பி. போடுவார்கள். இன்னும் 20 நாட்களில் விதைப்புபணி தொடங்க உள்ளதால், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி உரம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
நடவடிக்கை
தட்டார்மடம் அன்னாள் நகரை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், புனித அன்னம்மாள் ஆலயத்துக்கு பாத்தியப்பட்ட கல்லறை தோட்டத்தில் போதிய இடம் வசதி இல்லை. இதனால் ஆலயத்துக்கு பாத்தியப்பட்ட மற்றொரு இடத்தில் கல்லறை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் ஆலய இடத்தில் கல்லறை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஒருநபர் ஆணையம் அதிகாரி அருணாஜெகதீசன் விசாரணை அறிக்கையை உடனடியாக மக்கள் தளத்தில் வெளியிட வேண்டும், சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. மே மாதம் 22-ந் தேதியை சூழல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதே போன்று தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒருநபர் விசாரணை ஆணைய அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
பின்னர் கலெக்டர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.