குடிநீர் வசதி கேட்டு இருளர் இன மக்கள் திடீர் தர்ணா போராட்டம்
குடிநீர் வசதி கேட்டு இருளர் இன மக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை தரையில் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
குடிநீர் வசதி கேட்டு இருளர் இன மக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை தரையில் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குடிநீர் வசதி
கணியம்பாடி அருகே உள்ள துத்திக்காடு ஊராட்சி கொல்லை மேடு பகுதியை சேர்ந்த இருளர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் குடும்ப அட்டை, ஆதார் கார்டுகளை தரையில் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அதைத்தொடர்ந்து அங்கு ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஆர்த்தி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் அவரிடம் கூறியதாவது:-
பல கிலோ மீட்டர்
நாங்கள் கொல்லைமேடு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டுகிறோம். குடிநீர் எடுக்க பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலை வசதியும் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் தண்ணீர் இல்லை. அருகில் உள்ள பிற கிராமங்களுக்கு குடிநீர் குழாய் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் கிராமத்துக்கு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக எங்களுக்கு குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு மாலைக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட இயக்குனர் ஆர்த்தி கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேலை வேண்டும்
கணியம்பாடி ஒன்றியத்தில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கணியம்பாடி ஒன்றியத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வந்தோம். தடுப்பூசி செலுத்தும் பணியிலும் ஈடுபட்டோம். மொத்தம் 55 பேர் கணியம்பாடி ஒன்றியத்தில் பணியாற்றினோம். இதில் எங்களில் சிலரை பணிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கூறிவிட்டனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.