தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நெல்லை மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
தர்ப்பணம்
இறந்த முன்னோர்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் வருகிற அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று ஆடி அமாவாசை நாளில் தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் படித்துறை உள்ளிட்ட பகுதியில் காலை முதல் தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை அருகே ஜடாயுதீர்த்தம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சிறப்பு யாகங்களும், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அங்கு சேர்ந்த கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள்.
அம்பை
அம்பை தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். அம்பை தாமிரபரணி காசிநாதர் தீர்த்தக்கரை மற்றும் சின்ன சங்கரன்கோவில், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் காலையில் அம்பை மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாபநாசம்
இதேபோல் தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று அதிகாலையிலேயே பாபநாசத்திற்கு ஏராளமானோர் வந்தனர். இவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். பாபநாசம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.