சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசை
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் கொடுத்தால் இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கை. நேற்று ஆடி அமாவாசை தினத்தன்று சேலத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடநதது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடினர். அவர்கள் வாழை இலை வைத்து அதில் அரிசி, நெல், தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தேவூர்
ஆடி அமாவாசையையொட்டி நேற்று சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை ஆகின. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் நேற்று ஒரே நாளில் ரூ.65 லட்சத்து 30 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது என்றனர்.
தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மேலும் பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில், குள்ளம்பட்டி அய்யனாரப்பன் கோவில், சென்றாயனூர் தெற்கு தோட்டம், பெரியாண்டிச்சியம்மன் கோவில், பெரமாச்சிபாளையம் கம்பத்தையன் கோவில், கல்வடங்கம் அங்காளம்மன் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மேட்டூர்
மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அரிசி மாவில் பிண்டம் தயார் செய்து காய்கறிகளை வாழை இலையில் வைத்து எள் தண்ணீரை ஊற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த அரிசி மாவு பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர்.
தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இதனால் மேட்டூர் காவேரி பாலம், மேட்டூர் அனல்மின் நிலையம், புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
கஞ்சமலை
சேலம் மாவட்டம் கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சித்தேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வர தொடங்கினர். அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி வழிபாடு நடத்தினர்.
அங்குள்ள உப்பு குளத்தில் பக்தர்கள் மரு, மற்றும் தோல் வியாதி நீங்க உப்பு, மிளகு, வெல்லம், ஆகியவற்றை தலைசுற்றி போட்டு வேண்டி கொண்டனர். அங்குள்ள நீரோடை பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு எள், மஞ்சள், நெய், சாத உருண்டை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
எடப்பாடி
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் முன்புள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் கோவில், காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் திரளானவர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பூலாம்பட்டி காவிரிக்கரை கைலாசநாதர் கோவில், நவக்கிரக சன்னதி, பசுபதீஸ்வரி ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.