முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின்போது தனி தாசில்தார் திடீர் சாவு
தர்மபுரி:
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியின் போது தனி தாசில்தார் திடீரென மரணம் அடைந்தார்.
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் இறகு பந்து போட்டியில் தர்மபுரி மாவட்ட இலங்கை தமிழர் முகாம் தனி தாசில்தார் அதியமான் (வயது 54) கலந்து கொண்டு விளையாடினார்.
தனி தாசில்தார் மரணம்
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் மயக்கம் அடைந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தாசில்தார் அதியமானுக்கு மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். விளையாட்டு போட்டியில் பங்கேற்ற தனி தாசில்தார் திடீரென இறந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் இரங்கல்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்த தாசில்தார் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. தாசில்தாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.