வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியாரை கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்


வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியாரை கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்
x

வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கொண்டாநகரத்தில் கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

மாரியப்பன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மகாலட்சுமிக்கும் (25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியப்பன் தனது பெற்றோரின் வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

ரத்த வெள்ளத்தில்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சண்முகவேல் மாட்டில் பால் கறந்துவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியும் காணாமல் போயிருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகவேல் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே சீதாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடித்துக் கொன்ற மருமகள்

சண்முகவேலின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதில், சீதாலட்சுமியின் மருமகள் மகாலட்சுமி அதிகாலையில் ஆண் உடை மற்றும் ஹெல்மெட் அணிந்தவாறு இரும்பு கம்பியுடன் வீட்டுக்குள் செல்வதும், சிறிதுநேரத்தில் வீட்டில் இருந்து மாமியாரின் அலறல் சத்தம் கேட்பதும், பின்னர் வீட்டில் இருந்து பதற்றத்துடன் மகாலட்சுமி வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. மேலும் மகாலட்சுமி ஹெல்மெட்டை கழற்றியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து மகாலட்மியை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது மாமியாரை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

அவதூறாக திட்டியதால் தீர்த்துக்கட்டினார்

மகாலட்சுமி அடிக்கடி தனது மாமனாரின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் உள்ளிட்ட சிறுபொருட்கள் திருட்டு போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமனாரின் வீட்டுக்கு சென்ற மகாலட்சுமி, அங்கிருந்த பீரோவை திறந்து பணத்தை எடுத்ததாகவும், அதனை பார்த்த மாமியார் சீதாலட்சுமி அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை அவதூறாக பேசியதால் மாமியாரை கொலை செய்ய மகாலட்சுமி திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டார். மேலும் நகைக்காக மர்மநபர்கள் சீதாலட்சுமியை தாக்கியிருக்கலாம் என்று அனைவரையும் நம்ப வைப்பதற்காக திட்டமிட்டு கொலையை அரங்கேற்றி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை மகளிர் சிறையில் அடைத்தனர்.


Next Story