மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை
விருத்தாசலம் அருகே அச்சக உரிமையாளர் வீட்டில் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 40 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகை
விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 50). இவர் விருத்தாசலத்தில் அச்சகம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ராஜி தனது மகளின் திருமணத்திற்காக சிறுக, சிறுக நகையையும், பணத்தையும் சோ்த்து வருகிறார். இவ்வாறு சேமித்த பணத்தின் மூலம் வாங்கிய 40 பவுன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு சென்றார். பின்னர் விழா முடிந்ததும் நேற்று மாலை அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.
கொள்ளை
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
மேலும் பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளி ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பாா்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மகள் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த அனைத்து நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதால் ராஜி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.