தாய் இறந்ததால் மகளின் திருமணம் நிறுத்தம்
அகஸ்தீஸ்வரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து தாய் இறந்தார். இதனால் இன்று நடக்க இருந்த அவருடைய மகளின் திருமணம் நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). இவருடைய மனைவி ஜெகதா (58). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெகதா கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே ஜெகதாவின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று(புதன்கிழமை) திருமணம் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடிக்கு துணிகளை காயப்போடுவதற்காக ஜெகதா சென்றார். அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றில் துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்த போது அவர் திடீரென நிலைதடுமாறினார். இதனால் அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனே அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்து பதற்றத்துடன் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெகதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஜெகதாவின் கணவர் ராதாகிருஷ்ணன் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மகளின் திருமணம் இன்று நடக்க இருந்த நிலையில் கல்லூரி பெண் ஊழியர் இறந்த சம்பவத்தால் அந்த வீடே சோகமயமானது. இதனால் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி விட்டு வேறொரு நாளில் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.