தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்


தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்
x

திருக்கோவிலூரில் தந்தையின் மெழுகு சிலை முன்பு மகளின் திருமணம் நடந்தது. இது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவருடைய மனைவி பத்மாவதி. செல்வராஜ் தனது மகள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செல்வராஜ் இறந்தார்.

இதையடுத்து தனது கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பத்மாவதி, மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். அதன்படி மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தந்தை மீது கொண்ட பாசத்தால் மகேஸ்வாி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தற்போது தந்தை உயிருடன் இல்லையே என கருதி சோகத்துடன் இருந்து வந்தார்.

இந்த குறையை போக்கும் வகையில், பத்மாவதி குடும்பத்தினர் சிலை வடிவமைப்பாளர் மூலம் ரூ.5 லட்சம் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை வடிவமைத்தனர்.

இதையடுத்து மகேஸ்வரிக்கும், ஜெயராஜிக்கும் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் சந்தைபேட்டையில் திருமணம் நடந்தது. அப்போது மணமேடையின் முன்பு போடப்பட்டிருந்த சோபாவில் செல்வராஜியின் மெழுகு சிலை வைக்கப்பட்டது. பின்னா் மணமக்கள், செல்வராஜியின் சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். இந்த சம்பவம் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனதில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story