பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல்- ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்


பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம்  யூனிட்டுக்கு ரூ.8 வசூல்-  ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்

தென்காசி

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

மின்சாரக் கட்டண உயர்வு

புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது.

நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகிவருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும்.

இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்

இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன.

தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது.

அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரைப் பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள்.

இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்புச் செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-

கஷ்டப்படும் சூழ்நிலை

நெல்லையை சேர்ந்த ஆனந்த விசுவநாதன்:-

நெல்லை மாநகரத்தை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். 6 வீடுகளுக்கு அல்லது 10 வீடுகளுக்கு தேவையான குடிதண்ணீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவைக்கான தண்ணீர் ஆழ்குழாய் மூலம் எடுப்பதற்கு ஒரு மின் இணைப்பு பெறப்பட்டு அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வருகிறோம்.

இந்த மோட்டார் இணைப்பிற்கு இதுவரை வீட்டு உபயோக மின்சார கட்டணம் வசூல் செய்யப்பட்டது. தற்போது அதை உயர்த்தி உள்ளனர். இதனால் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 3 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய இடத்தில் தற்போது அது 6 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

மிகப்பெரிய சுமை

கொக்கிரகுளத்தை சேர்ந்த ஸ்ரீரங்கபெருமாள்:-

நெல்லை மாநகர பகுதியில் ஒரு காம்பவுண்டில் 5 முதல் 10 வீடுகள் வரை இருக்கும். இந்த வாடகை வீட்டில் நடுத்தர மக்கள் ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தியது மிகப்பெரிய சுமையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் எடுக்கும் மோட்டார் மின்கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காம்பவுண்டில் 10 வீடுகள் உள்ளது என்றால் தண்ணீருக்கு உரிய மின் கட்டணம் ரூ.5,240 வந்தால் அவர்களால் எப்படி செலுத்த முடியும்? வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தான் இந்த கட்டணத்தை வசூல் செய்வார்கள். எனவே, அரசு இதை பரிசீலனை செய்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சிரமம்

ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி கணபதிராமன்:-

தண்ணீருக்கு பயன்படுத்தக்கூடிய மின் இணைப்பிற்கு கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் வாடகைக்கு குடியிருப்பவர்களால் இந்த மின் கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அவர்கள் சிரமப்படுகிறார்கள்.

மேலும், ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்தி ஆங்காங்கே முகாம் நடத்துகிறது. இதைவிட பில் கணக்கெடுக்க வருகின்ற ஊழியரே அந்தந்த வீடுகளில் வைத்தே ஆதார் எண்ணை இணைத்து கொடுக்கலாம்.

ரத்து செய்ய வேண்டும்

இல்லத்தரசி சரசுவதி:-

எங்கள் குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. இங்கு மின் கட்டண உயர்வுக்கு முன்பு 560 யூனிட்டுக்கு ரூ.2,176 கட்டணம் செலுத்தினோம். தற்போது அதே 560 யூனிட்டுக்கு ரூ.4,880 கட்டணம் செலுத்தியுள்ளோம். இதனால் எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இல்லதரசி மீனா:-

அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வாடகை வீட்டில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் கட்டண உயர்வு அதிக சுமையை ஏற்படுத்தியது. தற்போது தண்ணீர் எடுப்பதற்கு உரிய மின் இணைப்பிற்கு வணிக கட்டணமாக மின் கட்டணம் வசூலிப்பதால் இன்னும் அதிக சுமை ஏற்படுகிறது.

வாடகை வீட்டில் ஒரே காம்பவுண்டில் 6 வீடுகள் இருக்கும். அதில் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். மற்றொரு வீட்டில் கணவன்-மனைவி மட்டுமே இருப்பார்கள். இந்த மின் கட்டண உயர்வை சமமாக பிரிக்கும் போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும். கணவன்-மனைவி மட்டும் இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிக சுமையாக இருக்கும். ஒட்டுமொத்தத்தில் மின் கட்டண உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவது என்பதை மாற்றி ஒரு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடும் முறை கொண்டு வர வேண்டும்.

தாங்க முடியாது

தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:-

நான் தென்காசியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். ஏற்கனவே மின் கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாங்கள் இந்த குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். குடிநீருக்காக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்களால் இது தாங்க முடியாது.

எனவே, வீட்டின் மின் கட்டணம் போன்று குடிநீருக்கும் எங்களுக்கு மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.


Next Story