நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் - இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்படுகிறது


நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் - இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்படுகிறது
x

காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்காக புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்பட இருக்கிறது.

மதுரை


காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்காக புறநோயாளிகள் பிரிவு தொடக்கம் இன்று முதல் கூடுதல் பணியாளர்களுடன் செயல்பட இருக்கிறது.

காய்ச்சல் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோல், சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மதுரையிலும் 184 இடங்களில் இந்த முகாம்கள் நடந்தன.

இருந்தாலும் மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் புறநோயாளிகள் பிரிவு இன்று (வௌ்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட இருக்கிறது. இங்கு மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அதற்குரிய மருந்துகள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை உள்நோயாளிகளாகவும் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பரிசோதனைக்காக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. வழக்கமாக செயல்படும் இடத்திலேயே இந்த புறநோயாளிகள் பிரிவு செயல்படும். உள்நோயாளிகளாக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமானால் காய்ச்சல் சிகிச்சைக்காக சிறப்பு வார்டும் தொடங்கப்படும்.

காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் இந்த புறநோயாளிகள் பிரிவில் வழக்கமான பணியாளர்களுடன், கூடுதலாக 15 மருத்துவ பணியாளர்களும், பாரா மெடிக்கல் பணியாளர்கள் 10 முதல் 15 பேரும் பணியில் இருப்பார்கள். குழந்தைகளுக்கு தனி இடத்திலும், பெரியவர்களுக்கு தனி இடத்திலும் பரிசோதனை நடத்தப்படும்.

முக கவசம் அணிய வேண்டும்

காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். நோய் பரவலையும் கட்டுப்படுத்தும். பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story