மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு பகல் நேர ரெயில்
மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முதல் கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
மதுரை,
மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முதல் கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
கொரோனாவால் நிறுத்தம்
கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மதுரை-ராமேசுவரம் இடையே இரு மார்க்கங்களிலும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. ஆனால், கொரோனாவை தொடர்ந்து பாசஞ்சர் ரெயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரெயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மதுரை-ராமேசுவரம், நெல்லை-திருச்செந்தூர், செங்கோட்டை-நெல்லை இடையே எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
ராமேசுவரத்துக்கு ரெயில்
இதில், மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் ரெயில் (வ.எண்.06651) சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மதுரையில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06656) ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.
இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயிலுக்கு பயணிகள் தரப்பில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. பயணிகள் உற்சாகத்துடன் அந்த ரெயிலில் பயணம் செய்தனர்.