மதுரை மாநகராட்சியில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை-மேயர் தகவல்


மதுரை மாநகராட்சியில்  5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை-மேயர் தகவல்
x

மதுரை மாநகராட்சியில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 501 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

மதுரை


மதுரை மாநகராட்சியில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 501 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.

குடற்புழு தொற்று

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணை இயக்குநர் (சுகாதாரம்) அர்ஜீன்குமார், உதவி கமிஷனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினர். பின்னர் இதுகுறித்து மேயர் இந்திராணி கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 68 சதவீதம் குழந்தைகளுக்கு குடற்புழு தொற்று இருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடற்புழு தொற்றானது மோசமான சுற்றுப்புற சுகாதாரத்தினாலும் முறையான கழிப்பறையை பயன்படுத்தாத காரணத்தினாலும் உருவாகின்றன. இந்த குடற்புழுக்களால் குழந்தைகளுக்கு ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தையினுடைய உடல்நலத்தை பாதிக்கின்றன. இந்த குறைபாட்டை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது.

அங்கன்வாடி மையங்கள்

அதன்படி ஒரு வயது முதல் 19 வயதுக்குப்பட்ட அனைவருக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டும் அல்பென்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 106 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், 149 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 346 தனியார் பள்ளிகளிலும், 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், 19 தனியார் கல்லூரிகளிலும், 675 அங்கன்வாடி மையங்களிலும், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 155 பகுதிகளிலும் என மொத்தம் 1504 மையங்களில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 722 குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கும், 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 25 ஆயிரத்து 779 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று (நேற்று) வழங்கப்படுகிறது. இந்த குடற்புழு நீக்க மாத்திரையால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

இந்த மாத்திரையை எடுத்து கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடற்வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சத்து 49 ஆயிரத்து 501 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மண்டல மருத்துவ அலுவலர் சாந்தி, சுகாதார ஆய்வளர் கவிதா உள்பட கலந்து கொண்டனர்.


Next Story