ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு பள்ளி மாணவன் சாவு


ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு பள்ளி மாணவன் சாவு
x

ராசிபுரம் அருகே கிணற்றில் கால் தவறி விழுந்த அரசு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நாமக்கல்

நாமக்கல்:

பள்ளி மாணவன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு சக்திவேல் (வயது 13), சுகவனேஸ்வரன் (11) என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டது. எனவே நிர்மலா 2 பேரையும் கூனவேலம்பட்டிபுதூருக்கு அழைத்து வந்தார். அங்கு நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் விளையாட சென்ற சுகவனேஸ்வரன் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

கிணற்றில் மூழ்கி சாவு

இதனால் சந்தேகம் அடைந்த நிர்மலா உறவினர்கள் உதவியுடன் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது ஆணைகட்டிபாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் சுகவனேஸ்வரன் அணிந்து இருந்த செருப்பு தண்ணீரில் மிதந்தது. உடனடியாக இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுகவனேஸ்வரனை மீட்டனர். ஆனால் அவன் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து சுகவனேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நிர்மலா புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சக நண்பர்களுடன் விளையாட சென்ற சுகவனேஸ்வரன் கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story