நல்லம்பள்ளி அருகே கிணற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி-நீச்சல் பழக சென்றபோது விபரீதம்
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே நீச்சல் பழக சென்றபோது, கிணற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
7-ம் வகுப்பு மாணவன்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் பூவரசன் (வயது 12). இந்த சிறுவன் வெங்கட்டம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பூவரசன் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.
பின்னர் அவர்கள் அதே ஊரை சேர்ந்த மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்றனர். அங்கு மாணவன் பூவரசன் தண்ணீரில் குதித்து நீச்சல் பழகி கொண்டிருந்தான். திடீரென அவன் தண்ணீரில் மூழ்கினான். நீண்ட நேரமாக அவன் வெளியே வரவில்லை.
தண்ணீரில் மூழ்கி பலி
இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய பூவரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு பூவரசன் பிணமாக மீட்கப்பட்டான். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
சோகம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பூவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீச்சல் பழக கிணற்றுக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.