சூளகிரி அருகே காதலனுடன் விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவி சாவு


சூளகிரி அருகே காதலனுடன் விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவி சாவு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:00 AM IST (Updated: 2 Nov 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே காதலனுடன் விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

9-ம் வகுப்பு மாணவி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள குருபரஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த். இவருடைய மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு அனுஸ்ரீ (வயது 14) என்ற மகள் இருந்தாள். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி அனுஸ்ரீ, தனது உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள எர்ரண்டப்பள்ளியை சேர்ந்த சவுந்தரராஜன் (22) என்பவரை காதலித்து வந்தாள்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மாணவிக்கு அறிவுரை கூறினர். மேலும் சவுந்தரராஜன் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவி மனவேதனை அடைந்தாள்.

விஷம் குடித்தனர்

இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சவுந்தரராஜன் மாணவி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவளை எர்ரண்டப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தங்களது மகளை சவுந்தரராஜன் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சவுந்தரராஜன் மற்றும் அனுஸ்ரீ, கடந்த 26-ந் தேதி இரவு எர்ரண்டபள்ளியில் விஷம் குடித்தனர். அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மாணவி அனுஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதலன் சவுந்தரராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூளகிரி அருகே காதலனுடன் விஷம் குடித்த பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story