ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டிரைவர் பலி-மற்றொருவர் படுகாயம்


ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டிரைவர் பலி-மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி முத்தம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 22). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சதானந்தன் மகன் முத்துராஜ் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் நேற்று மாலை பார்த்திபன், முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் சென்றனர். பின்னர் மாலை அவர்கள் முத்தம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார்.

டிரைவர் பலி

ராயக்கோட்டை அருகே நல்லராலப்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் பஸ்சை பார்த்திபன் முந்த முயன்றார். அப்போது எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீதுமோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார் டிரைவர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story