நாகாவதி அணையில் குளித்துவிட்டு திரும்பியபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலி-டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்


நாகாவதி அணையில் குளித்துவிட்டு திரும்பியபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலி-டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நாகாவதி அணையில் குளித்துவிட்டு திரும்பியபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலியானார். மேலும் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). பி.பி.ஏ. பட்டதாரி. இவர், தாதகவுண்டன்கொட்டாயை சேர்ந்த ஆனந்த் (25), கபில் (19), மூர்த்தி (16), கார்த்திக் (29), பாலக்கோடு சோம்பட்டியை சேர்ந்த டிரைவர் அரவிந்த் என்கிற மஞ்சுநாதன் (26) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து, செல்ல நினைத்தார்.

இதனால் அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் நல்லம்பள்ளி அருகே உள்ள நாகாவதி அணையில் குளிக்க சரக்கு வாகனத்தில் சென்றனர். பின்னர் அணையில் குளித்து விட்டு, இரவு சரக்கு வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வாகனம் கவிழ்ந்து பலி

சரக்கு வாகனத்தை மஞ்சுநாதன் ஓட்டி சென்றார். இந்த வாகனம் ஏலகிரி அருகே சென்றாயன்கொட்டாய் பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தொழிலாளி மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மஞ்சுநாதன், ஆனந்த், கபில், மூர்த்தி, கார்த்திக் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி பலியான மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகாவதி அணையில் குளித்து விட்டு திரும்பியபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story