கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி வடமாநில தொழிலாளி பலி
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.
கடத்தூர்
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.
தொழிலாளி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நஜரி ஆலம் (வயது 27). திருமணம் ஆகவில்லை. இவர் கோபி அருகே உள்ள கல்ராமணி என்னும் இடத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தன்னுடன் வேலை செய்த 4 பேருடன் சேர்ந்து காமராஜ் நகர் அருகே செல்லும் கீழ் பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு நஜரி ஆலம் சென்று உள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
உடல் மிதந்தது
இதை கண்டதும், அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாய்க்காலில் மூழ்கிய நஜரி ஆலத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் கோபி அருகே உள்ள காவிரிபாளையம் என்ற இடத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் நஜரிஆலம் உடல் மிதந்தது.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நஜரி ஆலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.