தர்மபுரியில் கிணற்றில் தவறி விழுந்து சோளக்கதிர் வியாபாரி சாவு
தர்மபுரி:
தர்மபுரியில் கிணற்றில் தவறி விழுந்த சோளக்கதிர் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப தகராறு
தர்மபுரி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர், தர்மபுரி பஸ் நிலையத்தில் சோளக்கதிர் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, ராதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் அருகே உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வியாபாரத்துக்கு சென்ற சங்கர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். மேலும் வியாபாரத்தை முடித்து கொண்டு திரும்பிய சங்கர், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
நீரில் மூழ்கி பலி
இதுபற்றி தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது சங்கர் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
பின்னர் சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு அவருடைய உடல் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. சங்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.