பாப்பாரப்பட்டி அருகே பச்சிளம் குழந்தை திடீர் சாவு-போலீசார் விசாரணை
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே பிறந்து 16 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பச்சிளம் குழந்தை
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 24). கோழி வியாபாரி. இவருக்கும் புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புவனேஸ்வரிக்கு பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 24-ந் தேதி முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி தனது பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பச்சிளம் குழந்தை சிகிச்சைக்காக பிக்கிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக குழந்தை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது, அது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பச்சிளம் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்து 16 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை திடீரென பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.