மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் தனியார் கம்பெனி ஊழியர் பலி-நண்பர்கள் 2 பேர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலியானார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் கம்பெனி ஊழியர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த சின்னமஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் பொன்மொழி. விவசாயி. இவருடைய மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்தநிலையில் அலெக்ஸ் பாண்டியன் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்களான சின்னசாமி மகன் பூவரசன் (25), சாமிநாதன் மகன் பிரித்திவிராஜ் (28) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்றார். பின்னர் மாலை அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரித்திவிராஜ் ஓட்டி சென்றார்.
கார் மீது மோதி பலி
வழியில் அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் எலந்தகுட்டப்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அலெக்ஸ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் பூவரசன், பிரித்திவிராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் பலியான அலெக்ஸ் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.