கோட்டப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
அரூர்:
கோட்டப்பட்டி அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 50). விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற வெங்கடாசலம் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது நள்ளிரவில் நடந்து வரும் போது அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி அரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது வெங்கடாசலம் கிணற்றில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. அவருடைய உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.