விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி: துக்கத்தால் மனைவியும் இறந்த பரிதாபம்-பென்னாகரம் அருகே சோகம்
பென்னாகரம்:
விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியான நிலையில், துக்கத்தில் இருந்த அவருடைய மனைவியும் பரிதாபமாக இறந்த சம்பவம் பென்னாகரம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்டக்டர் பலி
பென்னாகரம் அருகே உள்ள மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி காஞ்சனா (40). இந்த தம்பதிக்கு குமரவேல் (18), அகிலா (15), சிவரஞ்சினி (12) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 21-ந் தேதி மாலை பாலகிருஷ்ணன், தனது இளைய மகள் சிவரஞ்சினியுடன் ஆதனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மகள் சிவரஞ்சினி கண்முன்னே பாலகிருஷ்ணன் பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் சிவரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனிடையே பாலகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இறுதி சடங்கு செய்யப்பட்டு, பாலகிருஷ்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மனைவி சாவு
கணவர் இறந்த தகவல் அறிந்தில் இருந்து, காஞ்சனா துக்கத்தில் இருந்து வந்தார். மேலும் 3 பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோம்? என்று மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் நேற்று திடீரென காஞ்சனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் கணவர் பலியான நிலையில் துக்கத்தில் இருந்த மனைவியும் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.