ஜக்கசமுத்திரம் அருகே டிப்பர் லாரி மோதி தொழிலாளி சாவு-நண்பர் படுகாயம்
பாலக்கோடு:
ஜக்கசமுத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
தொழிலாளர்கள்
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலத்தைஅடுத்த சீங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை மாரண்டஅள்ளியில் இருந்து ஜிட்டாண்டஅள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சபரி ஓட்டி சென்றார். ஜக்கசமுத்திரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
லாரி மோதி பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சபரி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். ஹரிஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான சபரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.