பென்னாகரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
2 வயது சிறுவன்
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவருடைய மனைவி கன்னியம்மாள் (37). இவர்கள் சீசனுக்கு ஏற்றவாறு பழங்களை வாங்கி வந்து, அதனை விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஹரிபிரியா (9), தியாஸ்ரீ (7) ஆகிய 2 மகள்களும், சக்திதரன் (2) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமணன், கன்னியம்மாள் தர்பூசணி வாங்குவதற்காக ஓசூர் அருகே உள்ள மதகொண்டபள்ளிக்கு சென்றனர். இதனால் கன்னியம்மாள் தனது குழந்தை சக்திதரனை பென்னாகரம் அருகே உள்ள நெக்குந்தி கல் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள அவருடைய அக்காள் பாப்பாத்தியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். சிறுமிகள் ஹரிபிரியா, தியாஸ்ரீ ஆகியோர் பொம்மசமுத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர்.
தண்ணீரில் மூழ்கி சாவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாப்பாத்தி, சக்திதரனை வீட்டில் விட்டு விட்டு, தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு வைக்கோல் போட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது சக்திதரனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள தரைமட்ட தொட்டியில் சக்திதரன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தான்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி குழந்தையை மீட்டு, பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையம் மற்றும் லட்சுமணன், கன்னியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது தெரியவந்தது. பின்னர் குழந்தை சக்திதரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லட்சுமணன், கன்னியம்மாள் அங்கு சென்று, தங்களது ஒரே மகனான சக்திதரன் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.