பென்னாகரம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி


பென்னாகரம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

தொழிலாளி

பென்னாகரம் அருகே உள்ள எரகொல்லனூரை சேர்ந்தவர் மணி (வயது 37). இவர் பெங்களூருவில் உறவினர் ஒருவரின் பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

மணி கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார். சில நாட்கள் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அவர் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று விட்டதாக நினைத்தனர். நாட்கள் செல்ல செல்ல மணியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் அவர் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசவும் இல்லை.

கிணற்றில் விழுந்து சாவு

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், பெங்களூருவுக்கு சென்றனர். அங்கு பழைய இரும்பு கடைக்காரரிடம் மணி குறித்து விசாரித்தனர். ஆனால் மணி வேலைக்கு வரவில்லை என்று அவர் கூறினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணியை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் எரகொல்லனூர் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தண்ணீரில் மணியின் உடல் மிதந்தது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்றனர். பின்னர் அழுகிய நிலையில் கிடந்த மணியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த மணி, தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story