பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த 6 காட்டுப்பன்றி குட்டிகள் சாவு
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த 6 காட்டுப்பன்றி குட்டிகள் செத்தன.
காட்டுப்பன்றி குட்டிகள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, கரடி, குரங்கு, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் ஊருக்குள் புகும் மான், காட்டுப்பன்றி ஆகியவை தெருநாய்கள் கடித்து இறப்பதும், வாகனத்தில் அடிபட்டு சாவதும் நடக்கிறது.
இந்தநிலையில் பாலக்கோடு அருகே வனப்பகுதியையொட்டி உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அவர் கிணற்றில் பார்த்தபோது, அதில் 6 காட்டுப்பன்றி குட்டிகள் தண்ணீரில் செத்து மிதந்தன.
குழி தோண்டி புதைப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாம்ராஜ், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் விரைந்து சென்று, 60 அடி ஆழ கிணற்றில் செத்து மிதந்த 6 காட்டுப்பன்றிகளின் உடலை மீட்டனர். விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு தேடி வந்தபோது, 6 குட்டிகளும் கிணற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி செத்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர், 6 காட்டுப்பன்றிகளின் உடல்களையும் குழி தோண்டி புதைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.