பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.
பவானி
பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.
பள்ளிக்கூட மாணவர்
திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம், ஹரே ராம ஹரே கிருஷ்ணா 6-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மகன் ரோகித் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோடை விடுமுறையையொட்டி பவானி பெருமாள் மலை அருகே ஆர்.என்.புதுாரில் உள்ள பாட்டி வீட்டில் ரோகித் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்து வந்தார்.
ஆற்றில் குளித்தனர்
பெருமாள் மலை அருகே மங்களகிரி வழியாக காவிரி ஆறு செல்கிறது. இங்கு ரோகித்தும், அவருடைய நண்பர்களும் நேற்று முன்தினம் மாலை சென்று குளித்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் பாறை மீது ஏறி ஆற்றில் குதித்து விளையாடியுள்ளனர். அதேபோல் ரோகித்தும் ஒரு பாறை மீது ஏறி ஆற்றில் குதித்துள்ளார்.
அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து ரோகித்தின் நண்பர்கள் குளித்துவிட்டு கரைக்கு ஏறினார்கள். ஆனால் வெகுநேரமாகியும் ரோகித் வரவில்லை.
மாணவர் உடல் மீட்பு
உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி தேடிப்பார்த்தார்கள். அப்போது ஒரு பாறை இடுக்கில் சிக்கியிருந்த ரோகித் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.