கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கடலூர் கெடிலம் ஆற்றில் பிணமாக மிதந்தார் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கடலூர் கெடிலம் ஆற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் கெடிலம் ஆற்றில் அண்ணாபாலத்திற்கு கீழே 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கெடிலம் ஆற்றில் தண்ணீரில் மிதந்தவரின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
இதை அண்ணாபாலம் வழியாக சென்ற ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஜாமீனில் வந்தார்
தொடர்ந்து இறந்த நபர் குறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் புதுப் பாளையம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ் என்கிற சண்முகசுந்தரம் (வயது 42) என்று தெரிந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது நண்பர் ராஜா என்கிற நாராயணமூர்த்தியை கொலை செய்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
அந்த வழக்கு 2 நாட்களில் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், ராஜேஷ் கெடிலம் ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார். ஆகவே அவரை பழிக்கு பழியாக யாரே னும் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது கால் தவறி ஆற்றில் விழுந்து இறந்தாரா? என்பது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கெடிலம் ஆற்றில் அவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.