காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவருடைய மகன் ஜனார்த்தனன் (வயது 20). இவரும், இவரது நண்பரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(20) என்பவரும், திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்குமுன்பு அவர்கள், நண்பர்களுடன் முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்தபோது, லோகேஷ், ஜனார்த்தனன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதில் ஜனார்த்தனன் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தேடியும் லோகேஷ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் முக்கொம்பு அருகில் உள்ள திண்டுக்கரை பகுதி காவிரி ஆற்றில் ஒருவரது பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டதில் இறந்து கிடந்தது லோகேஷ் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லோகேஷின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.