கெடிலம் ஆறு தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்


கெடிலம் ஆறு தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்
x

கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆறு தடுப்பணையில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்:

கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டதால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

செத்து மிதந்த மீன்கள்

ஆனால் சில நேரங்களில் இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்து வரும் சம்பவங்கள் நடக் கிறது. அதன்படி நேற்று இந்த தடுப்பணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. துர்நாற்றமும் வீசியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது.

இது பற்றி மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எச்சரிக்கை

கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்துமிதக்கிறது. இதனால் கடலூர் மாநகர பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நீரும் மாசுப்பட்டு வருகிறது. ஆகவே கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து, அனுமதிக்கப்பட்ட கழிவுநீரை மட்டும் ஆற்றில் விட வேண்டும். மேலும் கெடிலம் ஆற்றங்கரையோரம் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து எவ்வித கழிவுநீரும் நேரடியாக கெடிலம் ஆற்றுப்படுகையில் விடுவதை தவிர்க்க வேண்டும். இதை மீறி எவரேனும் தங்களது கழிவுநீரை ஆற்றுப்படுகையில் விடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story