வழக்குகளில் சிக்கிய வாகனங்களால் வாழ்விழந்த குளம்


வழக்குகளில் சிக்கிய வாகனங்களால் வாழ்விழந்த குளம்
x

நிலக்கோட்டையில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களால் குளம் வாழ்விழந்து காணப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டையின் இதய பகுதியில் குமுந்தான் குளம் உள்ளது. சுமார் 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆக்கிரமிப்பின் பிடியில் குளம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குமுந்தான் குளம் நிலக்கோட்டை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. துரைச்சாமிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, எம்.குரும்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களுக்கு வாழ்வளித்து வந்தது.

ஆனால் இன்றைக்கு குளத்தின் நிலைமை அப்படி அல்ல. மழைக்காலத்திலும் குளத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. கழிவுநீர் தேங்கும் இடமாக குளம் மாறி விட்டது.

இது ஒரு புறம் இருக்க, ஆக்கிரமிப்பின் பிடியில் குளம் சிக்கியுள்ளது. நாளுக்குநாள் குளத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே செல்கிறது. தனியார் சிலர் குளத்துப்பகுதியில் குடிசை போட்டு ஆக்கிரமித்து இருக்கின்றனர். 2 ஏக்கர் நிலம் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

வழக்குகளில் சிக்கிய வாகனங்கள்

இதுமட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்பகுதியில் நாடக மேடை கட்டப்பட்டுள்ளது. மினி பஸ்நிலையமாகவும் மாறி விட்டது அந்த குளம். இப்படி யார் யாரோ குளத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் போது, போலீசாரும் தங்களின் பங்காக வழக்குகளில் சிக்கிய வாகனங்களை குளத்துக்குள் ஆங்காங்கே நிறுத்தி ஆக்கிரமித்து குளத்தை வாழ்விழக்க செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கேட்பாரற்று அந்த வாகனங்களை குளத்துக்குள் முடங்கி கிடக்கிறது. அவைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் இதுவரை ஈடுபடவில்லை என்பது வேதனையே. மேலும் சிலர் குளத்துப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நீர்நிலை பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

குப்பைகள் தீ வைத்து எரிப்பு

இதற்கிடையே பொதுமக்களும் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகி விட்டது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குப்பைகளை தீ வைத்து எரிக்கும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறுகிறது. இதனால் புகைமூட்டம் அப்பகுதியை சூழ்ந்து விடுகிறது. அக்கம்பக்கத்தினர் வசிப்போர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். குப்பைகள் தீப்பிடித்து எரியும்போது, குளப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும் தீப்பிடித்து எரிகின்றன.

விவசாயிகள் குற்றச்சாட்டு

ஒரு காலத்தில் வாழ்வாதாரமாக திகழ்ந்த இந்த குளம், தற்போது நோய் பரப்பும் இடமாக மாறி விட்டது என்றே சொல்லலாம். இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த குளம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அழிந்து போய் விடும்.

அந்த குளத்தை மீட்டு எடுக்க வேண்டிய பொறுப்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு உள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது.

எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து குளத்தை மீட்டு அதனை தூர்வாரி மீண்டும் புத்துயிர் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் ஆதாரம்

குளத்தின் இன்றைய பரிதாப நிலை குறித்து நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

ராஜாராம் (விவசாயி):- கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள குரும்பப்பட்டி, கூவனூத்து, நக்கலூத்து, முசுவனூத்து உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கும் முக்கிய நீராதாரமாக குமுந்தான் குளம் இருந்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அப்போது குளம் முறையாக பராமரிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு குளத்தை பாதுகாக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் எடுப்பார் கைப்பிள்ளை போல் குளம் மாறியுள்ளது.

விஜயராஜா:- எங்கள் முன்னோர்கள் காலத்தில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை பசுமையாக வைத்திருந்த குமுந்தான் குளம் தற்போது அதன் வளத்தை இழந்திருப்பது வேதனையாக அளிக்கிறது. பொதுமக்கள் குளித்தும், மீன்களை பிடித்தும் விளையாடி மகிழ்ந்த அந்த குளம் தற்போது கழிவுநீர் குட்டை போல் மாறி கிடக்கிறது. அதனை பார்க்கும் போது விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே குளத்தை மீட்டு சீரமைப்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஈடுபட வேண்டும்.

குப்பை மேடு

சுந்தரியம்மாள்:- நான் சிறுவயதில் தோழிகளுடன் சேர்ந்து குளித்து மகிழ்ந்த குளம் தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. கிராமங்களை செழிக்க வைத்த குளம் இன்று ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. எனவே குளத்தை விரைவாக தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மணிகண்டன் (வக்கீல்):- நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கும் மேல் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரமாக இருந்த குமுந்தான் குளம் தற்போது இருந்த இடம் கூட தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. மக்களின் தாகம் தணித்த குளத்தையே தற்போது தண்ணீருக்காக ஏங்க விட்டுவிட்டனர். எனவே குளத்தை சீரமைப்பதுடன் அதன் நீர்வழிப்பாதைகளையும் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story