கிருஷ்ணகிரியில் விபத்துகல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலிமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளியை சேர்ந்தவர் கமலேசன் (வயது 23) கல்லூரி மாணவர். இவர், தன் நண்பர்களான குரும்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி திக்னேஷ் (23) மற்றும் கூலித்தொழிலாளி மாரியப்பன் (22) ஆகியோருடன் நேற்று சூளகிரி அடுத்த சாமல்பள்ளத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை, 6:30 மணியளவில் கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே சென்ற போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கமலேசன், திக்னேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
போலீசார் விசாரணை
படுகாயங்களுடன் மாரியப்பன் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.