கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பலி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பலியானார்கள்.
கூலித்தொழிலாளி
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் பக்கமுள்ள குனிச்சியூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரும் அருகில் உள்ள வீரா கவுண்டனூரை சேர்ந்த வடிவேல் (36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தொன்னையன் கொட்டாய் பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். வடிவேல் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன உதவி மேலாளர்
உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் சிங் (30). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி லால் அருகில் தங்கி தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 10-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமீரியா பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மனோஜ் சிங் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மனோஜ்சிங் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூதாட்டி
ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பாலம் அருகில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அந்த மூதாட்டி பலியானார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.