வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் உள்பட 2 பேர் சாவு
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியமானவரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 47). விவசாயி. இவருடைய மகன் வெங்கடேசன்(21). இவர்கள் 2 பேரும் நேற்று குருபரப்பள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் மல்லேஷ் (27) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஜெகநாதபுரம் அருகே சென்றபோது மல்லேஷ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரன், வெங்கடேசன் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மல்லேஷ், சந்திரன் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.