கிருஷ்ணகிரியில் பட்டறையில் வெல்டிங் வைத்த போதுடீசல் டேங்க் வெடித்து சிதறியதில் லாரி உரிமையாளர் பரிதாப சாவு
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பட்டறையில் வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட விபத்தில், டீசல் டேங்க் வெடித்து லாரி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
டீசல் டேங்க் வெடித்தது
கிருஷ்ணகிரி தொன்னையன் கொட்டாயை சேர்ந்தவர் பழனி (வயது45). இவர், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் எதிரே வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆரியப்பன் (51). லாரி உரிமையாளர்.
இந்த நிலையில் நேற்று ஆரியப்பன் லாரி வெல்டிங் பணிக்காக, பழனியின் பட்டறைக்கு கொண்டு வந்தார். பிற்பகல் 2 மணி அளவில் பழனி, லாரியின் டீசல் டேங்க் அருகே வெல்டிங் வைத்து கொண்டு இருந்தார். அருகில் லாரி உரிமையாளர் ஆரியப்பனும் உடனிருந்தார். அப்போது திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து சிதறியது.
லாரி உரிமையாளர் சாவு
இந்த விபத்தில் ஆரியப்பன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழனி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விரைந்து வந்து ஆரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தாசில்தார் சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் உயிரிழந்த ஆரியப்பனின் லாரி, பழனியின் பட்டறையில் இருந்த வெல்டிங் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெல்டிங் வைத்தபோது டீசல் டேங்க் வெடித்து லாரி உரிமையாளர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு வால்வு
விபத்து குறித்து போலீசார் கூறுகையில், லாரியின் டீசல் டேங்க்கில் வெல்டிங் வைக்கும்போது அதில் உள்ள பாதுகாப்பு வால்வு திறக்கப்பட்ட பிறகு தான் வெல்டிங் வைக்கவேண்டும். ஆனால் அப்படி திறக்காமல் வெல்டிங் வைத்ததால் வெப்ப அழுத்தம் காரணமாக டீசல் டேங்க் வெடித்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. வெல்டிங் பட்டறை எதிரே உள்ள கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் டீசல் டேங்க் வெடித்த, காட்சிகள் பதிவாகி உள்ளதை ஆய்வு செய்து வருகிறோம் என்றுகூறினார்கள்.