கெலமங்கலம் அருகேபட்டாசு ஆலை தீவிபத்தில் படுகாயம் அடைந்த மேலாளர் சாவு
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்த குடோன் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாபுரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ஓசூர் நில வரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (வயது52) தலைமையில் தனி தாசில்தார் முத்துபாண்டி (47), தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பட்டாசு ஆலைக்கு ஆய்வு செய்ய சென்றனர். அப்போது ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்து பெட்டிகள் கீழே தவறி விழுந்தன. இதில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.
மேலாளர் சாவு
இந்த விபத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, பட்டாசு குடோன் மேலாளரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சேலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமான் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.