பர்கூர் அருகே விபத்துமுன்னால் சென்ற லாரி மீதுமினி லாரி மோதி 2 பேர் பலிவேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
பர்கூர் அருகே விபத்து முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
பர்கூர்:
பர்கூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதியதில் வேலூர் மாவட்டத்ைத சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
லாரி மீது மோதியது
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பரமசாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). லாரி டிரைவர். இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து மினி லாரியில் ஓலை கீற்றுகளை ஏற்றிக் கொண்டு கோவைக்கு சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (48) என்பவர் வந்தார்.
இந்த லாரி நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனபள்ளி பஸ் நிறுத்த பகுதியில் வந்தபோது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி சென்ற லாரியின் பின்புறம், சரவணன் ஓட்டி சென்ற லாரி பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
விபத்தில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் சரவணன் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பர்கூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.