படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய அண்ணன்-தம்பி சாவு


படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய அண்ணன்-தம்பி சாவு
x

கடலில் படகு கவிழ்ந்து மாயமான அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கடலில் படகு கவிழ்ந்து மாயமான அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேசுவரி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன்கள் முனியசாமி(வயது 30), அருண்குமார் (27), கசிஸ் சுமன் (22), மலைச்செல்வன் (19). மீனவர்களான இவர்கள் 4 பேரும் மங்களேசுவரி நகர் பகுதியில் உள்ள கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு திரும்பி வந்தபோது பள்ளிமுனை, அப்பாத்தீவுக்கு இடையே திடீரென்று பலத்த காற்று வீசியது. இதனால் ராட்சத அலைகள் எழுந்தன. கடல் சீற்றத்தால் மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

மாயம்

இதனால் படகில் இருந்த 4 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அருண்குமாரும், கசிஸ்சுமனும் நீச்சல் அடித்து கரை திரும்பினர். மலைச்செல்வன் கடலில் தத்தளித்தார். அவரை காப்பாற்ற அண்ணன் முனியசாமி முயன்றார். இதில் இருவரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்கள் கதி என்ன? என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே கரை திரும்பிய இருவரும் இதுகுறித்து கீழக்கரை துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடலோர போலீசார், மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

சாவு

இதைதொடர்ந்து, நேற்று 2-வது நாளாக மாயமான மீனவர்கள் மலைச்செல்வன், முனியசாமி ஆகியோரை தேடும் பணி நடந்தது. அப்போது படகு கவிழ்ந்த இடம் அருகே உள்ள அப்பாத்தீவு பகுதியில் மலைச்செல்வன் உடல் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முனியசாமி உடலும் அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

பின்னர், அண்ணன்-தம்பி 2 பேரது உடல்களும் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த மீனவர் முனியசாமிக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. மலைச்ெசல்வன் திருமணம் ஆகாதவர்.

படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story