மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி இறந்த தொழிலாளியியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி இறந்த தொழிலாளியியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொழிலாளி சாவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சித்திரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று நண்பகல் வரை மருத்துவ உதவியாளர் இல்லாததால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உள்ள பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.