பரமத்தி அருகே குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
பரமத்தி அருகே குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
பரமத்திவேலூர்:
9-ம் வகுப்பு மாணவன்
பரமத்தி அருகே உள்ள தேவிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஹரிக்குமார் (வயது 14). இவன் பரமத்தியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமார் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர்.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது தோட்டத்தில் இருந்த 5 ஆழ குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஹரிக்குமார் பிணமாக கிடந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து பரமத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
பின்னர் ஹரிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்தி அருகே குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.