கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
நீச்சல் பழக
தர்மபுரி செட்டிகரை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவருடைய மகன் விஷ்ணு (வயது 16). சோலைகொட்டாய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று நீச்சல் பழகுவதற்காக அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மாணவனை தேடினர்.
பிணமாக மீட்பு
அப்போது மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மாணவர் விஷ்ணுவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.