மின்சாரம் தாக்கி தள்ளு வண்டி ஓட்டல் கடைக்காரர் சாவு
மாட்லாம்பட்டியில் மின்சாரம் தாக்கி தள்ளு வண்டி ஓட்டல் கடைக்காரர் இறந்தார்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் மாட்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தள்ளு வண்டியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் இவர் தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சாலையோரம் போடப்பட்டு இருந்த சீரியல் லைட் வயர் வண்டியின் மீது உரசியது. இதில் பெருமாள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.