கால்வாய்க்குள் கார் பாய்ந்து இளம்பெண்-கைக்குழந்தை பலி
கால்வாய்க்குள் கார் பாய்ந்து இளம்பெண்ணும், அவருடைய கைக்குழந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பரமக்குடி,
கால்வாய்க்குள் கார் பாய்ந்து இளம்பெண்ணும், அவருடைய கைக்குழந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராமேசுவரம் வந்தனர்
நாமக்கல்லில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருபவர் மேகநாதன் (வயது35). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பி செல்லும்போது மேகநாதன் காரை ஓட்டியுள்ளார். பரமக்குடி அருகே பார்த்திபனூர் சாலையில் வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் மேகநாதனின் மனைவி பூர்ணிமா (28), அவரது 9 மாத பெண் குழந்தை வைஷ்ணவி ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மேகநாதன் மற்றும் அவரது தந்தை ஜெயராமன் (64), தாய் புஷ்பலதா (59), மாமனார் தாமோதரன் (64) ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விசாரணை
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த பூர்ணிமா மற்றும் 9 மாத பெண் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.