மின்கம்பத்தில் மினிவேன் மோதி 3 பேர் பலி
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் மினிவேன் மோதி 3 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே மின்கம்பத்தில் மினிவேன் மோதி 3 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மின்கம்பத்தில் மோதியது
திருச்சி எடமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 45). இவர் அப்பகுதியில் ஒலி, ஒளி அமைத்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த தேவாலய திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைத்து கொடுத்தார். விழா முடிந்ததை தொடர்ந்து, மின்சாதன பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மினிவேனில் ஜெயபால் மற்றும் தொழிலாளர்கள் திருச்சியில் இருந்து ஆம்னி வேனில் புறப்பட்டனர். இவர்கள் வந்த வேன் தேவகோட்டை வழியாக வந்து கொண்டிருந்தது. வேனை ஜெயபால் ஓட்டி வந்தார். அவருடன் 6 பேர் உடன் வந்தனர். காரைக்குடி அருகே உள்ள ஆவுடைப்பொய்கை அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையில் தாறுமாறாக ஓடியது. வேனை பிரேக் போட்டு நிறுத்த முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அந்த வேன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
இதில் மினிவேன் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஜெயபால், மணிகண்டன்(42), அரவிந்த் (33) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் வந்த மணிமாறன்(23), பாலாஜி(22), தினேஷ்(23), மற்றொரு அரவிந்த் (24) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து அறிந்த குன்றக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி பழைய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.