மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
தளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது, மனைவி, குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது, மனைவி, குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. தொழிலாளி. இவருடைய மகன் சங்கர் (வயது 23). இவரது மனைவி திவ்யா (20). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் அபிேஷக் என்ற குழந்தை உள்ளது. சங்கர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
இதனிடையே நேற்று முன்தினம் சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சின்னமதகொண்டப்பள்ளியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தளி அருகே உள்ள தோகரை கிராமத்தை சேர்ந்த அபி (22) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். தோகரை அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டன.
பரிதாப சாவு
இந்த விபத்தில் சங்கர் படுகாயம் அடைந்து தனது மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். திவ்யா, குழந்தை அபிஷேக் மற்றும் அபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.