மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி, தாயார் பலி
பிரசவத்துக்காக அழைத்துச் சென்றபோது மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி, அவருடைய தாயார் உயிரிழந்தனர். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
பிரசவத்துக்காக அழைத்துச் சென்றபோது மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி, அவருடைய தாயார் உயிரிழந்தனர். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
நிறைமாத கர்ப்பிணி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 25). இவருடைய மனைவி நிவேதா (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்சை டிரைவர் மலையரசன் (27) ஓட்டினார். அவருக்கு உதவியாளராக சத்யா (30) என்ற ெபண் இருந்தார்.
ஆம்புலன்சில் கர்ப்பிணி நிவேதா, அவருடைய தாயார் விஜயலெட்சுமி (55), உறவினர் திருச்செல்வி (31) ஆகியோர் ஏறிக்கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
மரத்தில் மோதியது
அதிகாலை 4.30 மணியளவில் ஊத்திகுளம் என்ற இடத்தில் சென்ற போது, எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நிவேதா, அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். திருச்செல்வி, மலையரசன், சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கர்ப்பிணி, தாய், சிசு சாவு
இதற்கிடையே நிவேதாவின் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற அவரது உடலையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். உடனடியாக மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன், அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சூரியநாராயணன் மற்றும் மகப்பேறு டாக்டர்கள் இணைந்து, நிவேதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த சிசுவும் பரிதாபமாக இறந்தது.
ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், உதவியாளர் சத்யா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
விசாரணை
விபத்து குறித்து அறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரசவத்திற்கு அழைத்துச்சென்ற போது மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி, அவரது வயிற்றில் இருந்த குழந்தை மற்றும் கர்ப்பிணியின் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.