வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதி உடுமலைரோட்டை சேர்ந்த இஸ்மாயில் மகன் ஆரியான் (வயது 20). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.
இந்தநிலையில் இவர் மட்டும் திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார். பிறகு நேற்று முன்தினம் காலை நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது கீேழ விழுந்த ஆரியான் மீது வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து தலைநசுங்கி ஆரியான் உயிரிழந்தார். சரக்கு வேன் 20 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வேன் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப்படுத்த போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்துள்ளனர்.