ஏரியில் தவறி விழுந்து பெயிண்டர் சாவு


ஏரியில் தவறி விழுந்து பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து பெயிண்டர் இறந்தார். மது விற்பனையை தடுக்க கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து பெயிண்டர் இறந்தார். மது விற்பனையை தடுக்க கோரி உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெயிண்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாய நாயகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் மாதேஷ் (வயது37). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மாதேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் கர்நாடக மதுவை குடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதேஷ் 3 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதனிடையே நேற்று காலை கக்கதாசம் ஏரியில் அவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் மாதேசின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாலை மறியல்

அதன்பேரில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் மாதேசின் பிணத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் கர்நாடக மதுபாட்டில் விற்பதாகவும், போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடக மதுவை குடித்ததால் போதையில் மாதேஷ் ஏரியில் தவறி விழுந்து இறந்துள்ளார். இதனால் மதுபாட்டில் விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும். மாதேசின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாதேஷ் மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்தவரின் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story